யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் கல்வி பயில்வதற்கு யாழ். மாவட்ட மாணவர்கள் எவரும் விண்ணப்பிக்கவில்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனால் இம்முறை யாழ். மாவட்டத்தில் இருந்து எவரும் யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடத்திற்கு தெரிவு செய்யப்படவில்லையென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 2022ஆம் ஆண்டு உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகத் தெரிவு விபரம் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் யாழ்.மாவட்டத்தில் பொறியியலில் கற்பதற்கு தகுதியுள்ள அனைவரும் தென்பகுதி பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்ததன் காரணமாக எவரும் யாழ். பல்கலைக்கழகத்தினை விருப்பத் தேர்வாக கொள்ளாத காரணத்தால் எவரும் இம்முறை அனுமதிக்கப்படவில்லை.
மிகுந்த சிரமத்தின் மத்தியில் 1990களில் அனுமதி பெறப்பட்டு 2010களில் ஆரம்பிக்கப்பட்ட பொறியியல் பீடம் யாழ். மாணவர்கள் பயன் பெறவேண்டுமென்ற நோக்கிலேயே ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில் வடக்கில் உள்ள பெற்றோர் பிள்ளைகளை சொந்த மண்ணிலேயே கல்வி கற்பிக்க விரும்பாதது தொடர்பில் புத்திஜீவிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            